நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இடையே மும்முனை போட்டி நிலவியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை உறுதிபடுத்தியுள்ளது.
பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி வாகைசூடியுள்ளது. 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வென்ற பாரதிய ஜனதா கட்சி, இந்த முறை 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் அறுதிபெரும்பான்மை பெற்றதை அடுத்து டெல்லி முதல் கன்னியாகுமரி வரை உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் நாளை பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது தேர்வு செய்யப்பட உள்ளது. கர்நாடகா தேர்தலில் பாஜகவையே மண்ணைக் கவ்வ வைத்த மாஸ்டர் மையிண்ட்டான டி.கே.சிவக்குமார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
Discussion about this post