டாஸ்மாக் கடைகளில் இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் 100 மற்றும் 500 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய 100, 200 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
ஆனால் 2019ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் இனி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த செய்தி உண்மையானது அல்ல என மறுத்துள்ளார்.
“டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை” எனத் தெரிவித்துள்ள அவர், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.