வாழ்க்கையில் இலக்கை அமைத்து வாழக் கற்றுக் கொண்டால்தான் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் – அமைச்சர் எ.வ.வேலு
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக, தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் பணி நியமன உத்தரவை வழங்கினர்.
முகாமில், முன்னதாக பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், வலி இல்லாமல் பிரசவம் இல்லை. பேராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை. முடியும் என்று எண்ணுங்கள் முடியும். நடக்கும் என்று எண்ணுங்கள் நடக்கும். வெற்றியின் இலக்கு வெகு தொலைவில் இல்லை. முயற்சி செய்தால் அந்த இலக்கை அடையலாம் என்று தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, வாழ்க்கையில் இலக்கை அமைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இல்லையெனில், சோம்பேறிகளாக ஆகி விடுவோம் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன். ஏ கே டி பள்ளி தாளாளர்கள் மகேந்திரன். ராஜேந்திரன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post