மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..! அக்டோபர் 11ம் தேதி…?
காவிரிப் பாசன பகுதி மாவட்டங்களில் அக்டோபர் 11ம் தேதி முழு அடைப்பு மதிமுக ஆதரவு..
வறட்சி காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் செப்டம்பர் 29ம் தேதி ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில், புதுடில்லியில் நடந்தது.
தமிழக அரசின் சார்பில் , “கர்நாடக அணைகளில், 50 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. எனவே, அம்மாநில அரசு நினைத்தால், 5,000 கன அடி வரை நீரை திறந்து விட முடியும். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் படி தந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவும் நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற அனைத்து பாதிப்புகளையும் தமிழகம் தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா செயல்படுகிறது. எனவே, வினாடிக்கு 12,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும்” என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
ஒழுங்காற்றுக்குழு அளித்த புள்ளி விபரங்களை பரிசீலனை செய்த காவேரி மேலாண்மை ஆணையம், “அடுத்த 15 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் அங்கு தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை போனது. இதனால் காவேரி படுகை பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகி நாசமாகி கொண்டிருக்கின்றன.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகத்தில் போராட்டத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும்,
எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியை தொடங்கிட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,
காவிரிப் படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில், அக்டோபர்-11 ஆம் தேதி காவிரிப் பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை , கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட, நடைபெறும் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் முழு வெற்றியடைய அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பேராதரவு தர வேண்டுகிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் வெற்றி அடைய முழு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..