தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வந்தது ஆனால் கடந்த மாதம் பாதிக்கு மேல் மழையின் தீவிரம் முற்றிலும் குறைந்தது. இதனால் பருவமழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதேபோல் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் வரும் 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வருவதால் 10ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டிருக்கிறார்கள். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்று ஆராயபட்டு வருகிறது.