மது சூதாட்டம் மோகம்..! கொள்ளைகாரராக மாறிய இராணுவ வீரர்..!
ராணுவத்தில் பணியாற்றி விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்தபோது மது சூதாட்டம் ஆடம்பர தேவைக்காக நண்பருடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த ராணுவ வீரர், காவல்துறை உதவி ஆய்வாளர் மனைவியிடம் கொள்ளையடித்த ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் கைது..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மேலக்கடை பகுதியில் வசித்து வரும் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவரது மனைவி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த ஆறு சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகில் வசித்து வரும் வசந்த் என்ற இளைஞர் தனது நண்பர் கும்பகோணத்தைச் சேர்ந்த சிவா என்பவருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது.
வசந்த் தற்போது இந்திய ராணுவத்தில் 80வது பட்டாலியனில் மிசோராமில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது நண்பருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு திருப்பதி நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அவர்களிடமிருந்து நான்கு சவரன் தங்க செயின், இரண்டு செல்போன்கள்,மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய வாகனங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
சூதாட்டம் மது விருந்து ஆகிய ஆடம்பர செலவுகளுக்காக விடுமுறையில் வந்து ராணுவ வீரர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட வசந்த் மீது கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற நான்கு வழி பறி சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், கொள்ளையடித்த பணத்தை கொண்டு விடிய விடிய சூதாடி அதில் பணத்தை இழந்து விட்டு மீண்டும் கொள்ளையடித்து வந்தது தெரிய வந்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..