கோவில்பட்டி சிறுவன் கொலை…!! போலீஸ் விசாரணை தீவிரம்…!!
நான்கு நாட்களாகியும் கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல் சிறுவனின் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன் பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி கடந்த திங்கட்கிழமை காணாமல் போய் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். அதிக அழுத்தம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என்று உடற்கூராய்வு முதற்கட்ட ஆய்வில் தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவன் மர்ம மரணத்திற்கு என்ன காரணம்..? யார் செய்தார்கள் என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நான்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் மேற்கொண்டனர்.
சிறுவன் காணாமல் போன அன்று கழுத்தில் ஒன்றை பவுன் தங்கச் செயின் மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிந்திருந்துள்ளார். இதனால் தொடர்ச்சியாக கடந்த நான்கு நாட்களாக சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதுமட்டுமல்லாது சிறுவன் வீட்டுப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது குறித்து சிறுவனின் தாயார் பாலசுந்தரி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது
இதனால் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை போலீசார் நூற்றுக்கு மேற்பட்டவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். சந்தேகத்திற்குரியவர்களே தனி இடத்தில் ரகசியமாக வைத்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்று காலையில் சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன் பாலசுந்தரி, தாத்தா கருத்துப் பாண்டி என 3 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷ மருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அதனை தடுத்தது மட்டுமின்றி, அவர்கள் எழுதிய கடிதத்தையும் வாங்கி கிழித்து போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. தங்களது மகன் ஏன் இறந்தான் என்று தெரியவில்லை, பாசமாக மகனே போய் விட்டான் நாங்கள் இருந்து என்ன செய்ய? கொலை செய்த குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாகவும், இனி இந்த பூமியில் வாழ்வதில் எங்களுக்கு அர்த்தம் இல்லை என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சிறுவன் தாய் பால சுந்தரி மற்றும் குடும்பத்தினரை. சந்தித்து சமாதானப்படுத்தினார். குற்றவாளிகளை உறுதியாக கைது செய்வோம் என்று உறுதி அளித்துள்ளார்..