2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடனைக் கட்டாமல் கம்பி நீட்டிய தொழிலதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை சாடும் விதமாக “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான குடும்பப்பெயர் எப்படி வந்தது?” என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி குறிப்பிட்ட சமூகத்தினரை கொச்சைப்படுத்தியதாக கூறி சர்ச்சைகள் வெடித்த நிலையில், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அன்றே ஜாமீனும் வழங்கியது.
ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்சனையில் இருந்து ராகுல் காந்தியை மீட்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சட்ட வல்லுநர்களும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மோடி என்ற பெயரை விமர்சித்தார் என்பதற்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகியும், தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மோடி என்ற பெயரை பயன்படுத்தி பதிவிட்ட பழைய ட்வீட் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, லலித் , நீரவ், நமோ என அடுத்தடுத்து மோடி என்ற பெயரை கடைசியாக கொண்டவர்கள் ஊழல்வாதிகள் என குறிப்பிடும் விதமாக குஷ்பு போட்ட பழைய ட்வீட்டை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் குஷ்புவும் மோடி பெயரை அவதூறு செய்துள்ளார், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா?, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Discussion about this post