‘புற்று நோய் கூட என்னை நிறுத்தி விடக் கூடாது, ஓடிக் கொண்டே இருப்பேன்’- கேரளாவில் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரின் நம்பிக்கை
புற்று நோய் என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் பயந்து விடுவோம். ஆனால், ஒரு மனதைரியமிக்கவர்கள் புற்று நோயை கூட அசால்ட்டாக கடந்து இப்போதும் சக மனிதர்களுக்கு உதவிக்கரமாக உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மனுஷிதான் ஷாகுபாநாத். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முக்தாலா என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். ஆணாதிக்கம் நிறைந்த டிரைவிங் துறையை தேர்வு செய்து கேரள மாநில அரசு போக்குவரத்து கழக டிரைவராகி சாதித்தவர் இவர். கடந்த 2002ம் ஆண்டு முதல் அரசு பஸ்ஸை ஓட்டி வந்தார் ஷாகுபாநாத்.
ஷாகுபாநாத்துக்கு 15 வயதில் திருமணமாகியுள்ளது. கணவர் கபீர் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்தார். கணவர் டிரைவிங் கற்றுத்தர எளிதாக கற்றுக் கொண்டார். 1996ம் ஆண்டு லைட் வெயிட்டும் அடுத்த ஆண்டே ஹெவி வெயிட் டிரைவிங் லைசென்ஸையும் ஷாகுநாத் பெற்றுள்ளார். 1998ம் ஆண்டு அர்ச்சனா என்ற தனியார் பேருந்தை ஓட்டிய ஷாகுபாநாத் 2002ம் ஆண்டு அரசு பஸ் ஓட்டுநரானார். அப்போது, வளையம் பிடிக்கும் வளை கரங்கள் என்ற தலைப்பில் இவரை பற்றி செய்திகள் வெளியானது. புனலூர் – குளத்துப்புழா மார்க்கத்தில் ஷாகுநாத் பேருந்து ஓட்டுவதை பார்க்கவே பலரும் அவரின் பேருந்துக்காக காத்து கிடந்துள்ளனர்.
இதனால், பேருந்தில் கலெக்ஷனும் அள்ளியது. இப்போது, பல பெண் டிரைவர்கள் பேருந்தை ஓட்டினாலும், அந்த காலக்கட்டத்தில் பெண் ஒருவர் பல சவால்களை சமாளிக்க வேண்டியது இருந்தது. இவரது , பேருந்தில் கலெக்ஷன் அள்ளுவதால், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பல விதங்களில் அவருக்கு இடையூறு செய்ததும் உண்டு. கணவர், இரு குழந்தைகள் குடும்பபாரம், சக டிரரைவர்கள் தந்தை தொல்லை அனைத்தையும் தாண்டிதான் வெற்றிக்கரமான அரசு பஸ் ஓட்டுநராக வலம் வந்தார் ஷாகுபாநாத்.
இப்படி உற்சாகமாக வாழ்க்கை போய்க்கொண்ட தருணத்தில்தான், கடந்த 2024ம் ஆண்டு ஷாகுபாநாத்துக்கு புற்றுநோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. முதல்முறை கண்டுபிடிக்கப்பட்ட போதே 4வது ஸ்டேஜில் இருந்தது. எனினும் , ஷாகுபாநாத் நம்பிக்கையை இழந்து விடவில்லை. கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டே, தனக்கு சொந்தமான அல் பிலால் டிரைவிங் ஸ்கூல் வழியாக ஆயிரக்கணக்கானோருக்கு டிரைவிங் கற்று கொடுத்து வருகிறார். இதுவரை 26 முறை கீமோகிராபி சிகிச்சையும் 20 முறை ரேடியேஷன் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் ஓய்ந்து விடவில்லை. காலை 7.30 மணிக்கு டிரைவிங் கற்றுக் கொடுக்க சென்று விடுகிறார்.
இது குறித்து, ஷாகுபாநாத் கூறுகையில், பெண்கள் ஆண்களை விட மிகுந்த எச்சரிக்கையுடன் பேருந்துகளை இயக்கக் கூடியவர்கள். எனினும், சிறிய தவறுகளை ஆண்கள் பூதாக்கரமாக்கி விடுவார்கள். ஆனாலும், நான் அதையெல்லாம் தாண்டி வந்து விட்டேன். இப்போது, புற்று நோய் கூட எனது ஓட்டத்தை நிறுத்தி விடக் கூடாது என்று கருதுகிறேன். அதனால்தான், நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன் என்கிறார்.
ஷாகுபாநாத் நம்பிக்கை மனுஷிதான்!