கேரள நிலச்சரிவு உயிரிழப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண தொகை அறிவிப்பு..!
தென்கிழக்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கேரளாவில் சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலையில், வயநாடு சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும், அந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், அந்த பேரிடரில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் கட்டுமானப் பணிக்காக கோள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்