குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?
காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, கர்நாடக அரசு தரப்பில், தற்போதைய சூழலில் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என கூறப்பட்டது.
இதனை அடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களின் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனால் கர்நாடகாவின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் கர்நாடக அதிகாரிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியதால் இரு மாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இறுதியில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து, காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்ததை குறிப்பிட்டு, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்டோபர் 15 வரையில் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது..
இதனையடுத்து, சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனை மேற்கொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post