கர்நாடகாவில் ஆன்லைன் வாடகை ஆட்டோவான ஓலா, ஊபர், ரேபிடோ சேவையில் அதிக அளவில் புகார்கள் வருவதால் செயலிகள் மூலம் ஆட்டோ புக் செய்யும் சேவையை தடை செய்வதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஓலா மற்றும் ஊபர் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் இருந்தாலும், குறைந்தபட்சம் ரூ. 100 வசூலிப்பது குறித்து பல பயணிகள் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவித்தனர்.
ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனில் 2 கிலோ மீட்டருக்கு 30 ரூபாய் என்பது அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம். ஆனால் இந்த விதிகளை மீறி ஆன்லைன் வாடகை ஆட்டோ நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஆட்டோ சேவையை நிறுத்துவதுடன் டாக்ஸி உள்ளிட்ட சேவைகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை அரசே மேற்கொள்ளும் வகையில் புதிய செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.