மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மது அருந்திய நிலையில் வேலை செய்வது அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் மீதான நம்பிக்கை குறையும் என்றனர். இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.
எனவே ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிய கூடாது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.