கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு புதன் கிழமை நடைபெற்றது. இதில் முன் எப்போதும் இல்லாத வகையில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் 36 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகளை தவிர, 918 சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 224 இடங்களுக்கு மொத்தமாக 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத இடையே முன்முனை போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் கட்சி 116 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 116 இடங்களில் முன்னிலை வகித்து வருவது வெற்றியை உறுதிபடுத்தியுள்ளது. பாஜக 76 இடங்களிலும், மஜத 27 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கர்நாடக சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டணா தொகுதியிலும், பாஜக மாநில தலைவர் சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Discussion about this post