தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86ஆவது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, இன்று முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அதிகாரிகள் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கர்நாடக மாநிலம் கடுமையான மழை நீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவும் நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த பங்கீட்டு விதிமுறையின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் சூழலில் கர்நாடகம் இல்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடமும் மனு அளிக்கவிருக்கிறோம். பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் முறையிடுவோம். கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைப் போக்கவே 70 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை” என தெரிவித்துள்ளார்.