“எனக்கு நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்… நான் துணை முதலமைச்சராக்கப்பட்டால் நல்லதுதான்…” தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் , சென்னை கோட்டூர்புரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அமைச்சரவை மாற்றம் குறித்த பரிந்துரைக்காக ஆளுநர் மாளிகைக்கு சென்றால் ஊடகங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் செல்வேன் என்று கூறினார். மேலும் அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை தற்போது இருக்கிறதா என்பதை முதலமைச்சர்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகைக்கு சென்றால் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். அமைச்சரவை மாற்றும் குறித்து எனக்கு தெரியாது.தனக்கு கீழே பணி செய்வோரை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிக்க முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அது நடக்குமா என்பது உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்.
நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்… நான் துணை முதலமைச்சராக வந்தால் நல்லதுதான். இன்று தலைமைச் செயலகம் சென்று வந்த பிறகு முதலமைச்சரை சந்திக்க தொடர்பு கொண்டேன் ,ஆனால் முதலமைச்சருக்கு கால் வலி என்பதால் ஓய்வு எடுப்பதாக கூறினர். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தால் போவேன்.
2 நாளாக நான் சென்னையில் இல்லை , ஒருநாள் சென்னையில் இல்லாவிட்டாலும் பாதி உலகம் தெரியமாட்டேன்கிறது. முதலமைச்சருடன் நான் வெளிநாடு செல்லவில்லை. நீர்வளத்துறை அதிகாரிகள்தான் வெளிநாடு செல்கின்றனர்.
அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை இருக்கிறதா என முதலமைச்சர் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த அமைச்சரும் தங்களது பொறுப்பு மாற்றப்படுமா என பதற்றத்தில் இல்லை. திமுகவின் தூண்டுதலால் டிடிவியும் , ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளதாக கேட்கிறீர்கள் , ஜெயகுமார் நல்ல மனிதர் , ஏதாவது ஒரு கருத்தை இதுபோல அவர் சொல்லிக் கொண்டிருப்பார்.
ஓ.பன்னீர் செல்வமும் , டிடிவியும் சிபிஐ , சிபிஎம் கட்சிகளைப் போல இருந்தால் நல்லதுதான்… அவர்கள் சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள் நான் டிவியில்தான் பார்த்தேன் என்று கூறினார்.
Discussion about this post