ஈழத்தமிழர் உரிமைக்காக குரல்கொடுத்தவர் இரா.சம்மந்தன்..! வைகோ இரங்கல்..!
ஈழத் தமிழர் உரிமைக்காக இரா.சம்பந்தன் இறுதிவரை குரல் கொடுத்தவர். இன்றும் நம் நெஞ்சில் நிறைந்தார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது “ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி மூச்சு அடக்கும் வரை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சர்வதேச அளவிலும் குரல் கொடுத்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் (வயது 91) 30.06.2024 அன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற ஆறாத் துயர் செய்தியை அடைந்தேன்.
1956 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியில் இணைந்த அவர், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கத்திற்கு பிறகு இரா.சம்மந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்த காலத்திலேயே ஈழத்தமிழர் உரிமைக்காகவும், சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
கடந்த 2009ம் ஆண்டில் முள்ளி வாய்க்கால் துயரத்திற்கு பின்னர், தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும், ஈழத்தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம், சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலம் என ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டவர்.
இரா.சம்பந்தன் அவர்களது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாக உள்ளது. அவரது மறைவால் பரிதவிக்கும் அவருடைய தமிழரசு கட்சியினருக்கும், அவரது இல்லத்தினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என மதிமுக பொது செயலாளர் வைகோ இவ்வாறே இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..