உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வெளியேறிய பின்னர் 3 குறிப்பிட்ட பகுதிகளுக்கு வர வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று(மார்ச் 02) அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், உக்ரைனில் சில இடங்களில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் வீரர்களால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில், உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுக்கு வீடியோக்கள் மூலம் இந்திய மாணவர்கள் தங்களின் நிலையைப் பகிர்ந்துள்ளனர். அதில், எல்லைகளுக்கு வர எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. ஓரிரு ரயில்கள் இயக்கப்படும்போது அதில் ஏற உக்ரைன் அதிகாரிகளும், மக்களும் அனுமதிப்பதில்லை.
எங்களை எட்டி உதைத்து வெளியே தள்ளிவிடுகின்றனர் என்று மாணவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.