ADVERTISEMENT
காத்மாண்டு, நேபாளத்தில், 26 பயணியரை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஆறு யாத்ரீகர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஜானக்பூருக்கு, இந்திய பயணிகள், டிரைவர் இருவர் மற்றும் உதவியாளர் உட்பட, 26 பேருடன் பஸ் ஒன்று சென்றது.மாதேஷ் மாகாணம், பாரா மாவட்டத்தின் கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது திடீரென பஸ், 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு யாத்ரீகர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து மீட்புப்படையினருடன் விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு, அண்டை மாவட்டமான மேக்வான்பூரின் ஹெதாவுடாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் டிரைவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேபாளத்தில் மோசமான சாலை மற்றும் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் காத்மாண்டுவில் இருந்து பொகாரா நகருக்கு சென்ற பஸ், ஆற்றில் கவிழ்ந்து எட்டு பயணியர் பலியாகினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.