உக்ரைனில் இருந்து தன்னை மீட்ட இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், கடந்த 4 நாட்களாக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்தியுள்ளது. அதன்படி, கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபிக்யூ என்ற பெண்ணை இந்தியா தூதரகம் மீட்டுள்ளனர்.
இதையடுத்து, தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தான் பெண் ஆஸ்மா நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், ‘வணக்கம் என் பெயர் ஆஸ்மா ஷபிக்யூ. நான் பாகிஸ்தானை சேர்ந்தவள். உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித்தவித்த என்னை மீட்பதில் உதவிய கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்த்ற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக எனது வீட்டிற்கு செல்வேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மீட்டு வருகின்றனர். இதன் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.