உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம்(மார்ச்.07) போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா விமானங்கள் மீண்டும் தாக்குதல் குறித்து முன் கூட்டியே எச்சரிக்கும் வகையில் தலைநகர் கீவில் சைரனும் ஒலிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், மக்கள் பாதுகாப்பான நிலவறைக்குள் சென்று பதுங்கி கொள்ளுமாறும் உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. அது மட்டுமின்றி, விமான தளங்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றை தாக்குவதற்கு ஏற்ற வகையில் அப்பகுதிகளை சுற்றி ரஷ்யா தனது படைகளை நிறுத்தி வைத்துள்ளது.