நடிகர் அஜித் குமார் ஆலோசகராக கொண்ட தக்ஷா நிறுவனம் 200 ஆளில்லா ட்ரோன் விமானங்களை தயாரிக்க இந்திய ராணுவத்திடம் ஒப்பந்தமாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, தாய்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், சீனா ஆகிய குழுவினர்களுடன் இந்தியாவின் சார்பில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.
இதேபோன்று தக்சா குழு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று வருகிறது. மாநில அளவில் ட்ரோன் தயாரிப்பில் பங்களிப்பு வழங்கி வந்த தக்சா நிறுவனம் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரிக்கவும் தேர்வாகியிருந்தது. இந்நிலையில் இந்திய ரா ணுவத்திற்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான 200 ட்ரோன்களை தயாரித்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்த ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post