காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் கொடுக்காத இந்தியா..!! எதிர்த்து கேள்வி கேட்ட பெண்..!!
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நிலவிவரும் போரை நிறுத்த கோரி ஐநாவில் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. அதில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் இந்த முடிவு அவமானகரமானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காசாவில் நிவாரண உதவிகளை கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் ஹமாஸ் இடையே மனிதாபிமான போரை நிறுத்த வேண்டுமென.., ஜோர்டான் அரசு சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை உறுதி செய்தல் போன்ற தலைப்பில் ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச்சபையில் தீர்மானத்தின் மீதான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது..
இந்த கணக்கெடுப்பில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், பூடான் உட்பட 121 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா, இங்கிலாந்து, உக்ரைன், ஜப்பான், ஜெர்மனி, கனடா உட்பட 44 நாடுகள் ஆதரவு கொடுக்காமல் புறக்கணித்தன. முன்னதாக, இந்த தீர்மானத்தில் ஹமாஸ் படை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், கடந்த 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நுழைந்து நடத்திய தாக்குதலை கண்டித்து, பணயக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் கனடா கொண்டு வந்த திருத்த தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஒப்புதலை புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கியது எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் உள்ளது. நமது நாடு, அகிம்சை மற்றும் உண்மையை கொள்கையாக கொண்டு உருவாக்கப்பட்ட நாடு..
இந்த கொள்கைகளே இந்தியாவின் தார்மீக தைரியமாகவும், சர்வதேச சமூகத்தின்
உறுப்பினராகவும் வழிநடத்தி உள்ளது. ஆனால், மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அழிக்கப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டும், அதில் நிலைப்பாட்டை எடுக்க மறுப்பதும் இந்தியாவின் வாழ்நாள் கொள்கைகளுக்கு எதிரானது’’ என எக்ஸ் இணையதளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
Discussion about this post