யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை என உக்ரைன் அதிபர் தனது இன்ஸ்டாகிராமில் இருப்பிடத்தை பதிவிட்டுள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
தற்போது, உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் அதிபர் போரை நிறுத்தும்படி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு, உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். அதே சமயம், உக்ரைன் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ரஷ்ய தரப்பில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கீவில் உள்ள தனது இருப்பிடத்தை இன்ஸ்டாகிராம் லொகேஷன் மூலமாக தெரிவித்துள்ளார்.இதனுடன் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நான் தலைநகர் கீவ்-வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன். யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புதினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகர் கீவ்வில் தான் இருக்கப்போகிறேன்’ என கூறியுள்ளார்.