குழந்தைகளுக்கு இந்த சேவையை செய்தால்.. கிடைக்கும் பலன்..? மஹாப்பெரியவா சொன்னது..!
இனிமே குழந்தைகளுக்காக நீ தினமும் இதே மாதிரி சேவை பண்ணு.. அப்போது புண்ணியம் கிடைக்கும் என மஹாபெரியவா கூறியுள்ளார்..
கும்பகோணம் அருகே உள்ள ஒரு வேதபாடசாலைக்கு காலங்கார்த்தால திடுதிப்புன்னு பார்த்துட்டு வரலாம்னு புறப்பட்டுட்டார் பெரியவா.
பொதுவாகவே வேக நடை நடக்கும் பெரியவா அன்று, வேதம் கத்துக்கற குழந்தைகளைப் பார்க்கப்போறோம்னு வேகம் கூடுதலாக இருந்தது.
அஞ்சு வயசுலேர்ந்து ஏழு வயசுக்கு உட்பட்ட பதினைஞ்சு இருபது குழந்தைகள் ஸ்ருதி சுத்தமா வேதபாடங்களைச் சொல்லிண்டு இருந்ததைப் பார்த்ததும், அப்படியே ஓசை எழுப்பாம நின்னு உன்னிப்பா கேட்டுண்டு இருந்தார்.
பெரியவா. கொஞ்ச நேரம் கழித்து, குழந்தைகளுக்கு வேதம் கத்துத்தந்துண்டு இருந்த குரு யதேச்சையா திரும்பினப் போதுதான் பெரியவா வந்திருக்கிறதையே பார்த்தார்.
“இந்த பாடசாலை உங்களோட பாதம் படறதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கோம்னு, வார்த்தைகளே வராம ரொம்ப பவ்யமா சொன்னார்அதே சமயம் எல்லாக் குழந்தைகளும் வேத மந்திரங்கள் சொல்லி பரமாசார்யாளுக்கு வந்தனம் பண்ணினர்..
ஆசார்யா ரொம்ப அமைதியா, “இது வேதத்தை பரிபாலனம் பண்ற இடம். காலம் காலமா இருக்கிற வேதம் ஷீணமாயிடாம, நீங்கலாம் அதை சம்ரட்சணம் செஞ்சுண்டு இருக்கேள்.வேத
மந்த்ரங்கள் இந்தக் குழந்தைகளோட வாக்குலேர்ந்து வர்றதைக் கேட்கிறதே ஆனந்த அனுபவமா இருக்கு. நான் திடுதிப்புன்னு வந்து நிற்பேன்னு உங்களுக்குதெரிஞ்சிருக்க நியாயமில்லை.அதனால் என்னை
மரியாதை பண்ணி வரவேற்கலைன்னெல்லாம் நினைகாதீங்கோ.ஸ்ருதி ஸ்ம்ருதிகளை மதிக்கறதுதான் முக்கியம்”
என்று சொல்லிவிட்டு யாருமே எதிர்பார்க்காதபடிக்கு அந்த வேத பாடசாலையோட உக்ராண அறைக்கு (சமையல்கட்டு) போனார்.
அங்கே கனத்த சரீரத்தோட இருந்த பரிசாரகர் (சமையல்காரர்) ஒருத்தர், வேர்க்க விறுவிறுக்க, சேவை பிழிஞ்சுண்டு இருந்தார்.(சேவை-இடியாப்பம்)
அவரைப் பார்த்ததும்,”என்ன குழந்தைகளுக்காக சேவை பண்ணிண்டு இருக்கியா? அப்படின்னு கேட்டா பெரியவா
ஏற்கெனவே சிரமப்பட்டு சேவை செஞ்சுண்டு இருந்த அவர்,ஆசார்யாளைப் பார்த்ததும் கையும் ஓடலை, காலும் ஓடலைன்னு சொல்வாளே அந்தமாதிரி படபடப்போட நாக்கு தடுமாற,”ஆஆஆ-ஆமாம் பெரியவா-
பாவம் குழந்தைகள் பெத்தவாளையெல்லாம் விட்டுப் பிரிஞ்சுவந்து இங்கேயே தங்கிப் படிக்கறதுகள். ஏதோ அதுகளுக்கு கொஞ்சம் நல்லதா பண்ணிக் குடுக்கலாமென்னுதான்! என்று சொன்னார்.
“நல்ல விஷயம்..அடிக்கடி சேவை பண்ணிவியோ?” கேட்டார், பெரியவா.
“முடிஞ்சப்ப எல்லாம் பண்ணிக்குடுப்பேன். சாப்டா எந்த ஹேதுவும் வராததா பார்த்துப் பண்ணினாதானே குழந்தைகள் வயத்துக்கு சிரமம் இருக்காது.அவாளும் சங்கடம் இல்லாம வேதம் படிப்பா! அதனால
நல்லாத்தான் செஞ்சு போடுவேன்!” சொன்னார்,பரிசாரகர்.
“ரொம்ப சந்தோஷம்…! இனிமே நீ தினமும் இதே மாதிரி குழந்தைகளுக்காக சேவை பண்ணு! பெரிய புண்ணியம் கிடைக்கும்” என்று மெல்லிசா ஒரு புன்னகையோடு சொல்லி விட்டு அங்கே இருந்து வெளியில் வந்தார் மகாபெரியவா.
“என்னடா இது.சேவை (இடியாப்பம்) பண்றது ரொம்பவே சிரமமான வேலை ஆச்சே…ஏதோ வாரத்துல ரெண்டு நாள்னாகூட பரவாயில்லை.சிரமத்தோட சிரமமா செய்யலாம்.ஆனா பெரியவா தினமும் பண்ணச் சொல்றாரே எப்படி முடியும்?னு மனசுக்குள்ளே நினைச்சு அதிர்ச்சியானார்
அவ்விடமிருந்து புறப்படத்தயாரான பெரியவா “நான் கூப்பிட்டேன் என்று பரிசாரகரை வந்துட்டுப் போகச்சொல்லுங்கோ” என்று சொன்னார் பெரியவா .
வந்து நின்னவரை ஏற இறங்கப் பார்த்த பெரியவா “என்ன தினமும் சேவை பண்ணுன்னு சொன்னதும் பயந்து போயிட்டே போல இருக்கு”ன்னு கேட்டார்.
இல்ல பெரியவா அதெல்லாம் ஒண்ணும் இல்லை. முடிஞ்ச வரைக்கும் குழந்தைகளுக்கு தினமும் சேவை பண்ணித் தரப்பார்க்கறேன். குரல்ல ஒரு ஸ்திரமே இல்லாம சொன்னார்.
லேசா சிரிச்சார் பெரியவா. “தினமும் சேவை பண்ணுன்னு நான் சொன்னதும் நீ முழிச்சதைப் பார்த்தப்பவே எனக்கு தெரிஞ்சுடுத்து, என் வார்த்தையை நீ தப்பாப் புரிஞ்சுண்டுட்டே’ன்னு..
நான் சொன்னதுக்கு அரத்தம் சேவை பலகாரத்தை தினமும் பண்ணணும்கறது இல்லை..ஆகாரத்தால குழந்தைகளுக்கு எந்த ஹேதுவும் வந்துடக்கூடாதுன்னு பார்த்துப்பார்த்து நல்ல பலகாரமா செஞ்சு குடுக்கறதா சொன்னே இல்லையா..அதுதான் பெரிய சேவை(தொண்டு) அந்தக் கைங்கரியத்தைன் விட்டுடாம செய்யின்னு சொன்னேன். புரிஞ்சுதா..? என கேட்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..