ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தலைவரின் ஓவர் கான்ஃபிடன்ட்.. என்ன ஆகுமோ?
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள், 8-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது.
மேலும், எந்த கட்சி யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்புகளும், அதிகமாக இருந்தது. குறிப்பாக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து, மெகா கூட்டணியை அமைக்க முயற்சி செய்தனர். ஆனால், அம்மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பூபிந்தர் சிங்கால், அந்த மெகா கூட்டணி பேச்சுவார்த்தை நொறுங்கியுள்ளது.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தான் ஹரியானாவில் நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜகவிற்கு எதிரான அலை என்பது அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பும் உள்ளது.
இதனால், எளிதில் வெற்றியை பெற்றுவிடலாம் என்று நினைப்பிலும், தொகுதிகளை பங்கீட மனமில்லாமலும், கூட்டணி பேச்சுவார்த்தையை பூபிந்தர் சிங் மறுத்துவிட்டதாக, தேர்தல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனை இன்னும் உறுதிபடுத்தும் விதமாக, ஆம் ஆத்மி கட்சி, இன்று தங்களது இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை வைப்பதற்கு, ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால், அந்த முயற்சிகளை, முன்னாள் முதல்வர் இப்படி சுக்குநூறாக உடைத்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதால், வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.