ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.
அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குயவர் தெருவில் இருந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் பேரணியை தகைசால் தமிழர்விருது பெற்ற மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலச்செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 4000- க்கும் மேற்பட்டவர்கள் சிவப்பு நிற சட்டை அணிந்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற பதாகைகளுடன் கையில் சிபிஐ கொடியை ஏந்தி கொண்டு கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேசிய சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் , தமிழக அரசின் வரிப்பணத்திலிருந்து அனைத்து வசதிகளும் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் அடாவடித்தனம் செய்து செய்து வருவதாகவும் ஆன்லைன் ரம்மி மூலம் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அரசு விளக்கமளித்த பிறகும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை எனவும் முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர் என பல அரசியல் கட்சிகள் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.