தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச்.24) மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி துபாயில் உலக கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன, அதன்படி மார்ச் 25 முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணி அளவில் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின் போது அவருடன் எம்.எம்.அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.
இந்த பயணத்தின்போது துபாய் கண்காட்சியில் தமிழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைப்பதுடன், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 28-ந்தேதி அபுதாபியில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 4 நாட்கள் துபாயில் தங்கி இருக்கும் மு.க.ஸ்டாலின் பின்னர் சென்னை திரும்புகிறார்.
இந்த கண்காட்சியின்போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.