பொங்கல் பரிசுடன் ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு…
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் திராவிட மாடல் அரசு துணை நிற்கிபதாக தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்தது.
ஆனால் பொங்கல் பரிசாக ரொக்கம் பணம் வழங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், பொங்கலுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒன்றிய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக ரேசன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வீடியோ விளக்கத்தை பதிவிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரொக்கம் வழங்கி இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு பதிவிட்டுள்ளார்.
பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு திராவிடமாடல் அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)