இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், 13 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளிட்ட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, இந்தியா என்ற கூட்டணியின்கீழ் செயல்பட்டு வருகின்றன.மும்பையில் நடைபெற்ற இக்கூட்டணியின் 3 வது கூட்டத்தில் எதிர்கால திட்டங்களை வகுக்க 14 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியில் முடிவெடுக்கும் உயர் அமைப்பான இக்குழுவில் டி.ஆா்.பாலு, சரத் பவார் உள்ளிட்ட 14 போ் இடம்பெற்றுள்ளனா்.இந்நிலையில், குழு உறுப்பினா்களில் ஒருவரான அபிஷேக் பானா்ஜி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம், டெல்லியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் வியூகங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், கேரளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 7 பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக 3 இடங்களிலும், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.