நாட்டில் முதன்முறையாக மும்பையில் எமு ஏ.சி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலை தூரத்தில் இருந்து அலுவலகம் செல்பவர்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில், இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் முதலில் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை பீச்சில் இருந்து செங்கல்பட்டுக்கு எமு ஏசி ரயில் இன்று( ஏப்ரல் 19) முதல் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே முதல் ஏசி மின்சார ரயில் சேவை காலை 7மணிக்கு ஓட தொடங்கியது.
ஒரு நாளில் சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு இரண்டும் தாம்பரத்துக்கு ஒரு முறை எனவும் மறு மார்க்கத்தில் அதே போல 3 முறை ஏசி எமு ரயில் இயங்கும். இந்த ரயில் முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். செங்கல்பட்டுக்கு 1.35 மணி நேரத்தில் சென்றடைந்து விடும்.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோடை காலத்தில் கடுமையான வெப்ப காலத்தில் பயணிகள் வசதிக்காக எமு ஏ.சி ரயில் சென்னையில் இயக்கப்படுகிறது. முக்கியமாக அலுவலக நேரங்களில் இந்த ரயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும். தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்களுடன் இந்த ரயில் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.