போலி லிங்க் மோசடி..!! சைபர் க்ரைம் போலீசார் விசாரணை..!!
மத்திய அரசின் நலத்திட்ட போலி லிங்க் அனுப்பி புதுச்சேரியில் 5 பேரிடம் ரூபாய் 2 லட்சத்து 47 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இது போன்ற போலியான லிங்கை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
புதுச்சேரியில் இணையவழி பணமோசடிகள், ஆன்லைன் செயலி மோசடிகள் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லதா. வாட்ஸ் ஆப் நம்பருக்கு பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டம் தொடர்பான லிங்க் வந்துள்ளது.
அந்த லிங்க்கை உண்மை என நம்பி, லதா பதிவிறக்கம் செய்துள்ளார். இதன் ஆபத்தை உணராத அப்பெண் பான் கார்டு மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு உள்ளார். அதன் பின்னரே, அவரது கிரெடிட் கார்டில் இருந்து 1 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.
இதேபோல் கோரிமேடு பகுதியை சேர்ந்த சுனில் ஜாதவ் என்பவரிடமும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா தொடர்பான போலி லிங்க் அனுப்பி, 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் மோசடியாக எடுத்து ஏமாற்றியுள்ளார்.
மேலும் கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்த திருமலை செல்வன் 21ஆயிரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலு மகாராஜன் 58 ஆயிரத்து 500, வில்லியனுாரை சேர்ந்த ராஜலட்சுமி 37 ஆயிரத்து 870 என 5 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 47 ஆயிரம் 370 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்பொழுது பிரதான் மந்திரி கிஷன் நியூ யோஜனா போன்ற பெயர்களில் லோன் தருவதாக கூறி குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டுள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் உங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான App-link ஆகும். எனவே அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த App-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.
அப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தால் உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டு உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள். உங்களின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்படும். அதனால் சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம்.
பண பரிவர்த்தனை, வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் 1930, 04132276144, 9489205246 எண்கள் மூலம் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது