குடி போதைக்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு தனது மகளை தந்தயே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூசிராஜு வெங்கடேஷ்வர்லு என்பவருக்கும், பத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட நரசம்மா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ்வர்லு மது, கஞ்சா மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி எப்போதும் நரசம்மா மீதுள்ள சந்தேகத்தின் பேரில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் நரசம்மா, தனது பெற்றோர் வீட்டிற்கு பிள்ளைகளுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி அப்பகுதியில் படித்த தன் மகள் மஞ்சுளாவை அழைக்க நரசம்மா சென்றுள்ளார். ஆனால், மஞ்சுளாவை அவர் தந்தை அழைத்துச் சென்றுவிட்டதாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு நரசம்மாவும் அமைதியாகச் சென்றுவிட்டார். ஆனால் மஞ்சுளாவை அழைத்துச் சென்ற வெங்கடேஷ்வர்லு, யாரும் இல்லாத கல்மேட்டுப் பகுதியில், தன் மகளையே தானே கொலை செய்துள்ளார். பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் தன் மகளைத் தேடிப்போன நரசம்மா, மஞ்சுளாவின் சடலத்தைப் பார்த்து கதறியழுதுள்ளார்.
இதுகுறித்து நரசம்மா, “மாதத்திற்கு ஒரு குழந்தையை கொன்று விடுவேன் என முன்பே தெரிவித்திருந்தார். ஆனால், இதைக் கோபத்தில் சொல்லியிருப்பார் என நினைத்தேன். ஆனால் இப்படிச் செய்வார் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் இருந்து மஞ்சுளாவை அவரது தந்தை வெங்கடேஸ்வரலு அழைத்துச் செல்வது, அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. குழந்தை மஞ்சுளாவை கொலை செய்தது தந்தை வெங்கடேஸ்வரலுதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து வெங்கடேஸ்வரலுவை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்பி மல்லிகா கர்க், “எப்போதும் தன் அம்மாவுடன் சண்டை போடும் அப்பா, திடீரென மனம் திருந்தி பள்ளிக்கு தன்னை அழைக்க வந்ததால் சந்தோஷத்தில் திளைத்துள்ளார், குழந்தை மஞ்சுளா. இதனால் தன் தந்தையுடன் சென்றுள்ளார். ஆனால், மகளை அழைத்துச் செல்வதற்கு வெங்கடேஷ்வர்லுவிடம் பணம் இல்லை. இதையறிந்த மஞ்சுளா, தன்னிடம் இருந்த ரூ.40ஐ ஆட்டோ டிரைவருக்கு வழங்கி உள்ளார். ஆனால் இறுதியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Discussion about this post