அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வெறும் வாக்கு வங்கியை கவர வேண்டும் என்ற நோக்கில் இலவச வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியல் கட்சிகள் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைப் பாதிப்பதால் இலவச அறிவிப்புகளை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வை உச்சநீதிமன்ற தலைமை அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது. நேற்று ஆக.25-ல் விசாரணையின்போது இவ்வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி ரமணா கூறியிருந்தார்.
இந்நிலையில் அதுகுறித்து இன்றைய அமர்வில் பேசிய தலைமை நீதிபதி, இவ்வழக்கில் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு விரிவான விசாரணை தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இவற்றில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் என்ன? நீதிமன்றம் மூலமாக நிபுணர் குழுவை நியமிப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ரமணா குறிப்பிட்டார். இவற்றில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இலவசங்கள் அறிவிப்புக்கு தடைகோரும் வழக்கினை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கூறிய தலைமை நீதிபதி ரமணா, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
Discussion about this post