20 நபர்களின் ஆவணம்..! 44 ஏசியில் உல்லாசமாக இருந்த வாலிபர்..! போலீசில் சிக்கியது எப்படி..!
ஆம்பூரில் 20 நபர்களின் ஆவணங்களை வைத்து 44 ஏசிகளை (குளிரூட்டி) வாங்கி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது, ஆம்பூர் நகர காவல் துறை நடவடிக்கை..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காடி தெருவை சேர்ந்த முகமது அஷ்வாக் என்பவர் ஆம்பூரில் உள்ள 20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஆதார்கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை பெற்றுக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து 44 ஏசிகளை வாங்கியுள்ளார்.
அதேபோல் முகமது அஷ்வாக், ஆம்பூரை சேர்ந்த தாசிம் என்பவரின் ஆதார் கார்டு மற்றும் வங்கி புத்தகங்களை வைத்து ஏசி வாங்கி பணம் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் தாசிமை தனியார் நிதி நிறுவனத்தினர், ஏசி வாங்கியதற்காக பணத்தை செலுத்தக்கோரி தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த தாசிம் இதுகுறித்து, ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் முகமது அஷ்வாக் தனது ஆவணங்களை பயன்படுத்தி, மோசடியில் ஈடுப்பட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முகமது அஷ்வாக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் நிறுவனத்தில் ஏசி வாங்கி அதனை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரூக் மற்றும் ஆம்பூர் பகுதியை சேர்ந்த அஸ்ரார் அஹமத் ஆகியோருக்கு ஏசிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக அவர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டபோது ஆம்பூரில் முகமது அஷ்வாக் என்பவர் கூலி தொழிலாளிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் வாங்கிக்கொண்டு ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காக பொருட்களை வாங்குவதாக நாடகமாடி கடைகளுக்கு சென்று ஏ சிகளை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் கூலி தொழிலாளிகளை இதில் சிக்க வைத்துள்ளார் இதனால் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து 10 க்கும் மேற்பட்டோர் புகார்கள் குவிந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிவித்தனர்.