நடிகர் விஜய் அமைக்க இருக்கும் இரவு பாட சாலை திட்டம் மக்களுக்கு தேவையா..?
நடிகர் விஜய் இரவுப் பள்ளிகள் தொடங்குவதாக அறிவித்து இருக்கின்றார். இதெல்லாம், 1960 களில் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. காரணம் அப்போது கல்வி அறிவு இல்லாத, மற்றும் பள்ளிகள் இல்லாத காலம்.
அண்ணா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கிளைகள் தோறும் நூலகங்களாகத் திகழ்ந்தன. இரவு நேரப் பள்ளிகளாகவும் இயங்கி வந்தன. பகலில் வேலைக்கு செல்வது இரவு படிக்கச் செல்வது என்று மக்கள் இருந்தனர். இப்போது தடுக்கி விழுந்தால் பள்ளிகள்தான். அதுவும் கூடப் போதாது என்று, தெருவுக்குத் தெரு தனியார் பயிற்சி மையங்கள்.
இந்தக் காலகட்டத்தில் இரவுப் பள்ளிகளில் யாருக்குப் பாடம் நடத்தப் போகின்றார்களோ? யார் போய்ப் படிக்கப் போகின்றார்களோ?
எவ்வளவு இடங்களில் அரசு பள்ளிகள் திறக்க முடியுமோ, அத்தனை இடங்களிலும் தமிழ்நாடு அரசு, பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டி வருகின்றது. அதுவும் குறைந்த கட்டணத்தில் படிக்கின்றார்கள். அந்தப் பள்ளிகளுக்குப் போதுமான வசதிகள் செய்து தர முடியவில்லை என்றும் ஒரு பக்கம் திணறுகின்றார்கள்.
நடிகர் விஜய் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பாரா? அல்லது ஒவ்வொரு பாடத்திற்கும் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருப்பார்களா? எதற்கு இந்த வெட்டி வேலை? விளம்பரத்திற்காக அறிவிப்பு வெளியிடக் கூடாது.
மாறாக, ஜப்பான் நாட்டைப் போல, ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தமிழ் கற்பித்தால் பயன் உண்டு. 234 தொகுதிகளிலும் அமைப்போம் என்கிறார். அந்தத் தொகுதிகளின் தலைநகரங்களில் அமைப்பாரா? அல்லது கிராமப்புறத்திலா? ஒரு ஊரில் அமைத்தால் போதுமா? எல்லோரும் இரவில் அங்கே வந்து திரும்பிப் போவதற்கு பேருந்து வசதி கிடைக்குமா?
அல்லது நடிகர் சூர்யா போல கல்வி அறக்கட்டளை அமைத்து, படிக்க வழி இல்லாத ஏழை குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்டலாம், புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். இதுபோன்ற செயல்கள் செய்யலாமே.., இரவு பாடச்சாலை திட்டம் யாருக்கு பயன் கொடுக்கும்.., அந்த இரவு பாடச்சாலை திட்டம் யாருக்கு முதியவர்களுக்கா அல்லது அரசு பள்ளியில் கூட சேர்ந்து படிக்க முடியாமல் இன்னும் வீட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கா என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விகள் போய் தற்போது அவர் அரசியலுக்கு வந்த பின் என்ன மாதிரியான திட்டங்கள் செயல் படுத்த போகிறார் என்றே பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.