இளைஞரின் ஆச்சர்யப்பட வைத்த மழைநீர் சேமிப்பு பிளான்..!
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தண்ணீரைப் பூமியில் தேடக்கூடாது.. வானத்தில் தேட வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பார். இதை அப்படியே பின்பற்றிய இளைஞர் ஒருவர் தனது வயலில் செயல்படாமல் வீணாக இருந்த ஆழ்குழாய் போர்வெல் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்க `போர்வெல் ரீசார்ஜ்’ முறையைப் பயன்படுத்தி புதிய முறையில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை உயரச் செய்வதுடன், விவசாயத்தையும் சிறப்பாகச் செய்து அசத்தி வருகிறார் இவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக காவிரி ஆற்றில் முறையாக தண்ணீர் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தினேஷ், ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ரொம்ப கஷ்டப்பட்டார். இதையடுத்து, தன்னுடைய நிலத்தில் 110 அடிக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் போர்வெல் ஒன்று அமைத்தார். சில காரணங்களால் அதில் தண்ணீர் வராமல் போனது. பின்னர் மீண்டும் வேறு இடத்தில் மற்றொரு போர்வெல் அமைத்து விவசாயம் செய்துவந்தார்.
எல்லோரும் தண்ணீர் வராத குழாய்களைக் கழற்றி விற்பனை செய்துவிடலாம் என்ற யோசனை சொல்ல, தினேஷுக்கு மட்டும் இதனை பயன்படுத்தி மழைநீரை சேமித்து நிலத்தடிக்குள் விடலாம் என்ற எண்ணம் உருவானது. பின் வீணாக இருந்த போர்வெல் குழாய்களைச் சுற்றி குழி வெட்டி மழைநீரும், வயலில் பாய்ச்சிய பிறகு வீணாகும் உபரி நீரும் நிலத்துக்கு அடியில் செல்லும்படி செய்து மழைநீரை சேகரிக்கத் தொடங்கியுள்ளார். இதை வேளாண்மைத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி விவசாயிகள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.
இது குறித்து தினேஷ் பேசியதாவது. “முன்பு எங்க பகுதியில் 30 அடிக்கு இருந்த நிலத்தடி நீர் தற்போது 70 அடிக்கு சென்றுவிட்டது. காவிரி ஆற்றை ஒட்டிய பகுதியிலேயே இந்த நிலை என்றால் மற்ற பகுதியின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். மேலும், தண்ணீர் உப்பு கலந்த தண்ணீராகவும் மாறி வருகிறது. இதற்குக் காரணம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதுதான். இதனால் மழைநீரை சேமிக்கும் அவசியத்தை உணர்ந்தேன். இதையடுத்து, செயல்படாமல் வீணாக இருக்கும் ஆழ்குழாய் போர்வெலை சுற்றி 10 அடி ஆழம், நீளம், அகலம் என்று குழி அமைத்தேன். அதற்குள் குழாயை ஒட்டி 10 அடி ஆழத்திற்க்கு குழி எடுத்து கான்கிரீட் உறைகள் இறக்கினேன். பின்னர் உறைக்கு 5 அடிக்கு கிணற்றுக் ஜல்லி, கரிக்கட்டை, கல் ஆகியவற்றை நிரப்பினேன்.
மேலும், நிலத்துக்குள் இருந்த ஆழ்குழாயில் தண்ணீர் செல்லும் அளவுக்கு ஓட்டை போட்டு அதில் நைலான் வலை கொண்டு குழாயைச் சுற்றி கட்டிவிட்டேன். எங்கள் பகுதி களிமண் பகுதி என்பதால் மழை பெய்யும்போது அவை உள்ளே சென்று படர்ந்து விடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. மழை பெய்யும்பொழுது உறைகளில் போடப்பட்ட பொருள்களின் வழியாக நீர் சுத்தம் செய்யப்பட்டு கசிந்து உள்ளே சென்று அதன் பிறகு வடிக்கட்டுவதற்காகப் போடப்பட்ட வலை வழியாக ஆழ்குழாய் மூலம் நிலத்தடிக்குள் சென்றுவிடும்.
மழைக் காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இதனால் பயிர் அழுகிவிடும் என்பதால், வாய்க்கால்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றுவார்கள். அந்தத் தண்ணீர் வீணாக செல்லும். அப்படி அந்த நீர் வீணாகாமல் இருக்கவும், மழைநீரை சேமிக்கவுமே இந்தப் புதிய முயற்சியை செய்திருக்கிறேன். மழை நீரையும், வீணாக போகும் தண்ணீரையும் இந்த போர்வெல் ரீசார்ஜில் நிரப்பி விடுவதால் நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
