மின்சார பில்லுடன் இந்த மாதம் தனியாக ஒரு தொகை வந்ததா? என்ன காரணம்?
பொது மக்கள் நிறைய பேர் இந்த மாதம் தங்களுடைய மின்சார பில்லுடன் தனியாக ஒரு தொகை சேர்ந்து வந்திருப்பதாகவும், எதற்காக அந்த தொகை என்று தெரியவில்லை என குழப்பத்தில் உள்ளனர். அவர்களுக்கான சிறிய விளக்கம் தான் இது.
எல்லாரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்போம்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாடு ஒதுக்கீடு கணக்கு உண்டு.
அந்த அளவை தாண்டும் பொழுது.. நமக்கு நமது இணைப்பின் பயன்பாடு வரம்பை உயர்த்தி அதற்கு ஏற்றார் போல டெபாசிட் தொகையின் பற்றாக்குறை தொகை நம்மிடம் வசூலிக்கப்படும். அதுதான் ACCD(Additional current consumption deposit) இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு ஏப்ரல்/மே மாத மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.
ACCD கணக்கிடும் முறை: கடைசி 12 மாதங்களுக்கு நம்முடைய மின்கட்டணத்தின் சராசரியின் 3 மடங்கு தொகை டெபாசிட் தொகையில் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கடைசி 12 மாதத்தில் நம்முடைய மொத்த மின் கட்டணம் 12 ஆயிரம் எனில்.. அதான் சராசரி தொகை 1000 அதன் 3 மடங்கு தொகை 3000 ரூபாய் நம்முடைய டெபாசிட்டில் இருக்க வேண்டும்.
ஒருவேளை 2000 உங்கள் டெப்பாசிட் இருக்கும் பட்சத்தில்.. மீதம் உள்ள 1000 ரூபாய் உங்களுடைய மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
ஒருவேளை தங்களின் வருட மொத்த மின் கட்டணமே.. 6000 எனில் 6000/12 = 500 அதன் 3 மடங்கு தொகை 1500 ஏற்கனவே 2000 ரூபாய் டெபாசிட்டில் இருந்தால் மேற்கொண்டு எந்த தொகையும் வசூலிக்கப்படாது.
ஒருவேளை தங்களுடைய மின் இணைப்பை திரும்ப ஒப்படைத்தால்.. இந்த டெபாசிட் தொகையை மின்வாரியம் தங்களுக்கு திருப்பி தர வேண்டும். இது பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை தான். எனவே அளவாக மின்சாரம் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது தங்களின் பர்சுக்கும் நல்லது.
Discussion about this post