“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” முதலமைச்சர் ஸ்டாலின் உரை..!!
வாழ்வில் ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு நீங்கள் வரவேண்டும்.., உங்கள் குழந்தைகளுக்கு வள்ளுவரின் புகழ் பற்றி சொல்லி கொடுங்கள் என சிகக்கோ மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்…
தமிழ்நாட்டில் முதலீட்டாலர்களை ஈர்பதற்காக அமெரிக்காவின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் FETNA உள்ளிட்ட 37 தமிழ்ச் சங்கங்கள் இணைந்து, நடத்திய மாபெரும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார்.
அப்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு , முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமின்றி. உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழர்களுக்கு பாதுகாப்பு காரணாக நமது திமுக அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக “அயலகத் தமிழர் நல வாரியம்” அமைத்து இருக்கிறோம். ஜனவரி 12-ம் தேதி அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களும் “தமிழால் ஒன்றிணைவோம்.. உலகெங்கும் தமிழ்” போற்றப்படட்டும் “தமிழே வெல்லும்” என்ற தலைப்புகளில் பல கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் அமைத்து உள்ளோம்.. இந்த அமைப்பின் மூலம் பல மாணவர்கள் வெளிநாட்டிற்கு மேற் படிப்பிற்காக சென்றுள்ளனர்..
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் திட்டமாக “எனது கிராமம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது…
இஸ்ரேல் நாட்டில் படிக்க சென்ற 126 மாணவர்கள் அங்கு நடந்த வன்முறையில் சிக்கியுள்ளார்கள் அப்படி சிக்கிகொண்ட அனைத்து மாணவர்களையும் மீட்டு தமிழகம் அழைத்து வந்தோம்.. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்துள்ளோம்..
இந்த உலகின் எந்த இடத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவோம்.. “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற எல்லோருக்குள்ளோம் ஒரு உணர்வு இருக்கிறது.. அந்த நம்பிக்கையை நம்முடைய திமுக ஆட்சி கொடுத்து வருகிறது.
இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் ‘வேர்களைத் தேடி’ என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம்! அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன். “இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு!”
சாதி – மத வேறுபாடுகளை வீழ்த்தும் வல்லமையும், எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தும் வலிமையும் தமிழுக்குதான் இருக்கிறது! “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வு கொண்டவர்கள் நாம்! இந்த எண்ணத்தை விதைத்தது திராவிட இயக்கம்! உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு. இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள், சூழ்நிலைகளின் காரணமாகவும் பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். அப்படி வந்து உங்கள் திறமையால் உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறீர்கள்.
உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள்.
சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், “நம்முடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று சொல்லுங்கள். நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும்!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..