ADVERTISEMENT
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழா!!!
400 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதில், 100 கடைகள், 4 உணவகங்கள், துரித உணவகங்கள் பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய்ப்பால் ஊட்டும் அறை, ஏ.டி.எம். அறைகள், 540 கழிப்பறைகள், நடத்துநர்கள், ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் என பல்வேறு வகையில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12- ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர், பேருந்து நிலைய கல்வெட்டு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தபின் பேட்டரி காரில் அமர்ந்தபடி பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.
அதன்பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர் பாபு, புதிய பேருந்து நிலையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)