நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர்..!! நீதிபதி பிறப்பித்த உத்தரவு..?
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வழக்கு தொடர்பாக கடந்த 4ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சவுக்கு சங்கரை மே 22ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, தேனி பழனி செட்டிபட்டி காவல்துறையினர் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுமீதான விசாரணையில், 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இரண்டு நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, சவுக்கு சங்கரை சந்திக்க அவரது வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து அதனை தனது ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட்ட, யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ