ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் விதத்தில் உலக அளவில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி : இந்த உலக மகளிர் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டில் ஆன்மிகம் அறிவுசார் சமூக மற்றும் அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும்.இந்த சிறந்த நாளில் நாம் பெண்களின் பெண்மையை மதித்து கொண்டாடுவோம்.
இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,பெண்கள் ஏன் அடிமைகள் ஆனார்கள் என்று கேள்வி எழுப்பிய அறிவொளி பெற்ற பெரியார், அண்ணா, கருணாநிதி தலைமையிலான திராவிட மாதிரி அரசு, பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண்களுக்குச் சொத்தில் சமத்துவம், அரசு வேலைவாய்ப்பில் 40 சதவீத இடஒதுக்கீடு அதிகரிப்பு, தொடக்கப் பள்ளிகளில் பெண் ஆசிரியர் பணி நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு, மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்வு, மகளிர் சுயஉதவிக்குழு, திருமண நிதியுதவி, கல்விச் சலுகை. , மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். உரிமைகளை மீட்டெடுப்பதற்கான திட்டங்களின் பட்டியலை நீங்கள் தொடரலாம். பெண்களின் முன்னேற்றத்துக்கு திராவிட மாதிரி அரசும் துணை நிற்கும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இபிஎஸ் : தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க, கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்றுச் சிறப்புக்கு உரியனவாகும். அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என எம்ஜிஆர், தனி இடஒதுக்கீடு வழங்கினார்.
பெண்கள் நலனுக்காக ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கல்விக்காக ரொக்கப் பரிசு, தாலிக்குத் தங்கம், மகப்பேறு நிதி உதவி என்று தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார்.
அவர் மறைவுக்குப் பின்னர், பெண்களுக்கான மகப்பேறு திட்டத்தின் உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்வு, மானிய விலையில் ஸ்கூட்டர், மகப்பேறு விடுமுறைக் காலம் அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, சமூகத்தில் ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆற்றல் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, பெண் எத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமோ, அத்தனை உயரத்திற்குச் சென்று சீரும், சிறப்புமாக வாழ அதிமுக எந்நாளும் உழைக்கும்.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மருந்துகள் எப்படி நம் உடல் நிலையை சீராக்கி நலப்படுத்துகிறதோ, அதுபோல மகளிரும் நம் குடும்பத்தை சீராக்கி நிலை நிறுத்துகிறார்கள். மகளிர் தினத்திலே பெருமைக்குரிய பெண்குலத்தின், அருமைகளை போற்றி என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய மக்கள்தொகையில் சமமான பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் இயக்கம் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு சம உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.
இதேபோல், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் ஆகியோர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.