ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வந்தடைந்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.
பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர். இதில் முதல் நபராக நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு கடந்த 5-ந்தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகெல் வரவேற்றார். அடுத்ததாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் தன் மனைவியுடன் நேற்று காலை 6.15 மணிக்கு டெல்லி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் வரவேற்றார். மேலும் அமெரிக்காவில் இருந்து அதிபர் பைடன் இந்தியா வர புறப்பட்டுள்ளார் என்றும் அறியப்படுகிறது.
இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வந்தடைந்துள்ளார். தனது மனைவியுடன் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி சௌவ்பே வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டெல்லி ஷாங்கிரிலா ஹோட்டலில் தங்கவுள்ளார்.