ஒன்றிய அரசு பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கேரளா, தமிழ்நாடு என நாட்டின் மிக முக்கிய இடங்களில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு எனப்படும் (NIA) மற்றும் அமலாக்கத்துறை தீவிர சோதனையில் இறங்கியது.
தமிழகத்தில் பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்புகளின் நிர்வாகிகள் பல பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் 28ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருவதாக புகார் எழுந்த நிலையில் ஒன்றிய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை நேற்று வெளியிட்டது குறிப்பித்தக்கது.