மெலிந்த கூந்தலை சீராக்க இது போதும்..!
பெண்களுக்கு கடந்த நாட்களில் நல்லா கருகருவென்று கூந்தல் அடர்த்தியாக இருந்தது இப்போது மெலிந்து போய்விட்டது என வருத்தம் கொள்பவர்கள் ஏராளம். அப்படி கவலை கொள்பவர்கள் ஏன் முடி கொட்டுகிறது என கண்டுபிடித்து அதற்கான வைத்தியம் செய்தால் தான் அந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
முடி மெலிந்து போவதற்கு மாசு நிறைந்த சூழலில் அதிகம் இருப்பது, மோசமான உணவுகளை உட்கொள்வது, குறைவான தூக்கம், தலையை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவை ஆகும்.
முடி உதிர்வுக்கு காரணங்கள்:
முதலில் சருமத்தை போலவே தலையையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சருமத்தில் படியும் இறந்த செல்கள் மற்றும் அழுக்கள் போலவே தலையிலும் படியும் எனவே வாரத்தில் இருமுறை அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி தலையை சுத்தம் செய்தல் வேண்டும்.
நீங்கள் உண்ணும் உணவு முடிக்கு வலுவளிக்கும் வகையில் இருக்க வேண்டும் உதாரணமாக வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, ஒமேகா 3, புரதங்கள் மேலும் ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும் அப்போதுதான் தலைமுடிக்கு எந்த குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் பாதுகாக்க முடியும்.
பெண்களின் கர்ப்ப காலங்களில் அவர்களின் ஹார்மோன்களின் மாற்றங்கள் காரணமாக முடி உதிர்தல், அடர்த்தி குறைதல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். இவற்றை கையாள மன அழுத்தம் குறைவதற்கான செயலில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
முடிக்கு அதிக கெமிக்கல் நிறைந்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
முடிக்கு ஸ்ட்ரெயிட்னர் போன்ற சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், காரணம் இதில் வரும் சூடு முடிக்கு பாதிப்பை உண்டாக்கும்.
முடியை ரொம்ப டைட்டாக பிண்ணிக் கொள்ளுதல் போன்றவற்றை செய்தல் கூடாது, இதனால் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல் அதிகமாகும்.
மெலிந்த கூந்தலை சரிசெய்ய கீழே சில வகை வீட்டு வைத்தியம் தரப்பட்டுள்ளது அவற்றை பின்பற்றுங்கள்.
விளக்கெண்ணெய்:
ஒரு பவுலில் விளக்கெண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் கலந்து லேசாக சூடு செய்து பின் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் மைல்டான ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்து வரலாம்.
ரோஸ்மேரி எண்ணெய்:
ஒரு பவுலில் ரோஸ்மேரி எண்ணெய் 5 சொட்டு மற்றும் ஜோஜோபா எண்ணெய் 2 சொட்டு விட்டு கலந்து உச்சந்தலையில் தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் தலைக்கு குளிக்கலாம்.
ஆம்லா எண்ணெய்:
நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் 2 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு 1 சொட்டு சேர்த்து கலந்து முடியின் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் தலைக்கு குளித்து வரலாம்.
இது மட்டும் இல்லாமல் மீன், முட்டை, நட்ஸ், பருப்பு வகை ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் முடிக்கு நல்ல ஊட்டமாக இருக்கும்.