2024 அல்லது 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து தமிழக பாஜக மணிலா அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சியில் வாழ்வாதாரம் உயர்ந்ததால், உ.பி., மக்கள் பாஜகவின் நிரந்தர வாக்காளர்களாக மாறி உள்ளனர். மறுபடியும் ஒருமுறை இந்தியா, ஒருமித்த குரலில் நாம் மோடியுடன் பயணிப்போம் என்ற வார்த்தையை உறுதியுடன் பதிவு செய்துள்ளது.
இதுவரை இந்தியாவில் மதத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் இருந்தது இப்போது அது உடைக்கப்பட்டுள்ளது.வட மாநிலங்களில் கொரோனாவை கையாண்ட விதத்திற்குத்தான், மக்கள் வெற்றியை அளித்துள்ளனர். உ.பி.யில் 33 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சி ஆட்சியை பிடிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகி விட்டதாக தேர்தல் ஆணையர் கூறி உள்ளதால் 2024அல்லது 2026-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம். இந்த சட்டமன்ற தேர்தலில் மணிப்பூர், கோவாவை போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.