இன்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த விஷயங்கள் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “2024ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கொடுக்க உள்ள சொற்ப சீட்டுகளுக்காக யார் காலையும் பிடிக்க மாட்டேன்” என எடப்பாடி பழனிசாமியை நேரடியாக நோஸ்கட் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிமுகவுடன் கூட்டணி என்றால் பதவியையே ராஜினாமா செய்துவிடுவேன் என கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் பதவியை ஏற்றுக்கொண்டேன். அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்க அல்ல, தனித்து போட்டியிட்டால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளர முடியும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக டெல்லி தலைமை முடிவெடுத்தால் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வானதி சீனிவாசன், கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பேசியதாகவும், இதனால் கூட்டத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே வாய்த்தகராறு எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் ராஜினாமா உறுதி என்ற முடிவை ஏற்கனவே அண்ணாமலை போன் மூலமாக கட்சி தலைமைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷா, மோடி ஆகியோரின் குட்புக்கில் இடம் பிடித்த அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு அதிமுகவிற்கு பாதகமாக அமையுமா, இல்லை அண்ணாமலைக்கு ஆப்பாக மாறுமா என சோசியல் மீடியாவில் விவாதமே வெடித்துள்ளது. ஏனென்றால் தேசிய அளவில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே இந்தியா முழுவதும் தனது கூட்டணி கட்சிகளை வலுப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுகவின் கூட்டணியை உதறித்தள்ள தலைமை விருப்பப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஒருவேளை அண்ணாமலை அமித் ஷா அல்லது மோடியை நேரில் சந்திக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.