ஆனி மாத பௌர்னமி.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்..!
நினைக்க முத்தி தரும் திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலையை அண்ணாமலையாராக பாவித்து கிரிவலம் வருவது வழக்கம்.
இந்த வகையில் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் வந்தனர்.
இந்த மாத பௌர்ணமி விடுமுறை தினத்தை ஒட்டி வந்ததால் வழக்கமான கூட்டத்தை விட கூடுதலாக பக்தர்கள் வந்திருந்து கிரிவலம் வந்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய காலையிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் ஆறு மணி நேரத்திற்கு மேலாககாத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கிரிவலம் வந்த பக்தர்கள் இரவில் கொட்டும் மழையிலும் மழையை பொருட்படுத்தாது கிரிவலம் வந்தனர்.
பௌர்ணமி தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலுமிருந்து திருவண்ணாமலைக்கு நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகளும், சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
-பவானி கார்த்திக்