“அதிமுக ஒருங்கிணைப்பு குழு..” கூட்டணி வைக்கப்போகும் அந்த கட்சிகள்..!!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ‘அதிமுக ஒருங்கிணைப்பு குழு’ எனும் பெயரில் செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி , புகழேந்தி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் விதமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக தலா 10 பொறுப்பாளர்களை தங்களது ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நியமித்துள்ளதாகவும் , வரும் 26 ம் தேதி எழும்பூர் சிராஜ் மகாலில் தங்களது ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்களுடைய முயற்சியால் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் ஓ.பன்னீர் செல்வம் , சசிகாலா , தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறிய அவர்கள் , எடப்பாடி பழனிசாமி ,ஓ.பன்னீர் செல்வம் , தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசும் காலகட்டம் நெருங்கி வருவதாகவும் கூறினர்.
ஜேசிடி பிரபாகர் பேட்டி :
நாடாளுமன்ற தேர்தல் முடிவு அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி தந்தது. பல இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் பறிபோய் உள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே கவலையுடன் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என நாங்கள் சுவரொட்டி ஒட்டினோம்.
இதே நிலை நீடித்தால் கட்சிக்காக சிறைக்கு சென்றவர்கள் உட்பட கட்சிக்கென உழைத்தவர்கள் என்ன செய்வார்கள். 4 பிரிவுகளாக எங்கள் கண்களுக்கு தெரிகிற 4 பிரிவையும் ஒன்றாக இணைக்க பாடுபடுகிறோம் , அண்ணன் ஓ. பன்னீர் செல்வம் , அண்ணன் எடப்பாடி பழனிசாமி , சசிகலா, தினகரன் என நால்வருக்கும் இணைப்பு குறித்து கடிதம் அனுப்பியுள்ளோம்.
தமிழகம் முழுவதும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. 4 பிரிவில் யாரையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு முன்பு ஓ.பி.எஸ் மருமகன் வீட்டில் நாங்கள் ஆலோசித்தோம். வழிகாட்டுதல் குழு அமைத்து அதன் முடிவுக்கு தான் கட்டுப்பட இருப்பதாக ஓபிஎஸ் எங்களிடம் கூறினார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்த ஓபிஎஸ் -ன் முடிவை நாங்கள் வேண்டாம் என்று கூறினோம்.
அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். பதவிகள்தான் இணைப்பிற்கு தடையாக உள்ளது, எனவே 4 பேரும் அமர்ந்து பேச வேண்டும்.
பாஜகவுடன்தான் தொடர்ந்து கூட்டணி என்ற ஓ.பி.எஸ் முடிவு இப்போது எங்களுக்கு ஏற்புடையது அல்ல , பொதுக்குழு, செயற்குழுவின் மூலமே கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்.
தனிக்கட்சி நடத்துவதால் டிடிவி தினகரன் இணைப்புக்கு சாத்தியமில்லை என்று கூறினாலும் , அவர்களுடன் கூட்டணி அமைத்து அதிமுக வாக்குகள் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஓ.பி.எஸ் , இபிஎஸ் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தங்களுக்கு வேதனை தருவதாக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். கட்சியின் வாக்குகள் குறைவதை அதிமுக எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4 பேரும் அமர்ந்து பேசி இணைப்புக்கான தேதியை தீர்மானிக்க வேண்டும் , அதை தாமதம் செய்தால் தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் அந்த கோரிக்கையை வலியுறுத்தி திரளும் சூழ்நிலை உருவாகிவிடும்.
4 பேரும் அமர்ந்து பேசும் காலகட்டம் நெருங்கி வருகிறது. வைகோ தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறிய கருணாநிதி, பின்னர் தேவை என்றவுடன் வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியை காப்பாற்ற நினைப்பவர்கள்தான் தலைவர்கள்.
இணைப்பு என்று வந்தால் கோபத்தை மறந்துவிட வேண்டும். அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுவை மீட்டெடுத்து ஓபிஎஸ் , டிடிவி ஆகியோரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினார். அதிமுகவை அழிககப் போவதாக அண்ணாமலை தேவையில்லாமல் பேச வேண்டாம் .
கே.சி. பழனிசாமி பேட்டி :
அதிமுக தொண்டர்கள் செயலிழந்து நிற்கின்றனர் , நடுநிலையாளர் வாக்குகளும் அதிமுகவிற்கு வருவதில்லை.
இணைப்புக்கான முயற்சியில் ஈடுபடும் எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மேல்மட்ட தலைவர்களாக இருப்பவர்களுக்கு பதவி ஆசை மட்டுமே இருக்கிறது. வாக்கு வங்கி குறைந்தது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை .
திமுக மீண்டும் ஆளும் கட்சியாக வந்து விடுவோம் என அதீத நம்பிக்கையுடன் இருக்கின்றனர். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற திமுகவினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை வளர்க்க நினைப்பது தவறில்லை , ஆனால் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அண்ணாமலையின் விருப்பமாக உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தற்போது அமைத்துள்ளோம். இரண்டரை லட்சம் தொண்டர்கள் இதற்கு தயாராக உள்ளனர்.., அவர்கள் தனிப்பட்ட எந்த தலைவர்களுக்காகவும் இல்லை , கட்சிக்காவே இருக்கின்றனர். தொகுதிக்கு குறைந்தபட்சம் 100 பேர் எங்கள் முயற்சிக்கு ஆதரவளிக்கின்றனர்.
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்களின் அழுத்தத்தால் 6 அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தி பேசி வருகின்றனர்.
எங்கள் கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை, ஆனால் அதன் அழுத்தத்தால் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் குறித்து தற்போது வெளிப்படையாக கூற முடியாது.
பாஜக போன்ற மதவாத, இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விட்டுவிடக் கூடாது. அதிமுக வீழ்ச்சி அதற்கு இடம் தந்துவிடக் கூடாது.
புகழேந்தி :
எம்ஜிஆர் , ஜெயலலிதா குறித்து தவறாக பேசிய தா.மோ.அன்பரசனை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும். கருணாநிதி இறந்துவிட்டார், எனவே அவரை நாங்கள் திட்டமாட்டோம்.
எம்ஜிஆருடனான கள்ளத் தொடர்பால் ஜெயலலிதா முதலமைச்சரானார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியது தவறு தா.மோ.அன்பரசன் உனக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை , எங்க கட்சி தொண்டன் சோர்ந்துவிட்டான் என்று நினைத்து நீ பேசாதே.
எம்ஜிஆர் ஜெயலலிதா குறித்து தவறாக பேசினால் எந்த நிலைக்கு சென்றும் போராடுவோம். அன்பரசன் மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழியே ஜெயலலிதா வை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டினார். அதிமுக 3 வது இடத்துக்கு போய் விட்டதை பார்த்துவிட்டு இனி 4 வது இடத்துக்கு போய் விடும் என அண்ணாமலை கூறுகிறார்.
எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் பொதுச்செயலாளர் ஆகவே முடியாது. நாங்கள் தெருத்தெருவாக செல்லப் போகிறோம். வரும் 26 ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் சிராஜ் மகாலில் எங்களது ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..