டெல்லியில் கைகட்டி நிற்காவிட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக் கதவை தட்டும் என்பது அன்புமணிக்கு தெரியும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள “டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்” அமைச்சர் அறிவித்த பிறகும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும் – போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா?
அதிகபட்சமாக “இனி நாங்கள் டெல்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை” என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா? அப்படியெல்லாம் அன்புமணி ராமதாஸ் அவசரப்படமாட்டார் என்று எங்களுக்கு தெரியும்.
ஏனென்றால் அப்படி அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக் கதவை தட்டும் என்பது அவருக்குத் தெரியும்.